Latestமலேசியா

X70 புரோட்டான் கார் வைத்திருந்த பிச்சைக்காரருக்கு சமூக நல உதவி நிறுத்தம்

கோலாலம்பூர், மார்ச்-12 – பஹாங், மாரானில் பிச்சை எடுத்தே X70 புரோட்டான் காரை வாங்கி வலம் வந்த ஆடவருக்கு, சமூக நலத் துறை JKM-மின் மாதாந்திர உதவித் தொகை அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிக்கான 450 ரிங்கிட் உதவி நிதியைப் பெற்று வந்த அந்த பலே பிச்சைக்காரரருக்கு, இம்மாதம் முதல் அவ்வுதவி நிறுத்தப்பட்டுள்ளது.

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நொராய்னி அஹ்மாட் அதனை மக்களவையில் தெரிவித்தார்.

அவ்வாடவர் தற்போது பேருந்து நிறுவனமொன்றில் வேலை நேர மேலாளராக மாதமொன்றுக்கு 2,000 ரிங்கிட் சம்பளத்தில் வேலை செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, JKM உதவியைப் பெற அவர் இனியும் தகுதியற்றவர் என்ற அடிப்படையில் உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக நொராய்னி சொன்னார்.

OKU உதவி தொகை நிறுத்தப்பட்டதோடு, இனியும் பிச்சையெடுக்கக் கூடாது என்ற உத்தரவாதக் கடிதத்தில் அவரிடம் கையெழுத்து வாங்கப்பட்டு, கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இரு கைகளிலும் அங்கவீனத்தால் பாதிக்கப்பட்ட அந்நபர், மாரான் ஸ்ரீ ஜெயா இரவுச் சந்தையில் பிச்சையெடுத்து வந்திருக்கிறார்.

வெறும் 5 மணி நேரங்கள் அமர்ந்து பிச்சையெடுத்தே, 500 ரிங்கிட் வரையில் அந்நபர் ‘சம்பாதிப்பது’ கடந்த மாதம் JKM மேற்கொண்ட சோதனையில் தெரிய வந்தது.

அங்காடி கடைகளுக்கு நடுவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அந்நபரை JKM அணுகிய போது, காது கேளாத ஊமைப் போல் அவர் பாசாங்கு செய்துள்ளார்.

பின்னர் அதட்டிக் கேட்டதில், தாம் ஊமை இல்லை என்பதை ஒப்புக் கொண்டு, தனது அடையாள அட்டையை எடுப்பதற்காக, அருகில் உள்ள தனது வாகனத்திற்கு அழைத்துச் சென்ற போது தான், JKM அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

தனது கார் என அவ்வாடவர் அங்கு காட்டியது உண்மையில் X70 புரோட்டான் கார் ஆகும்.

அச்சம்பவம் வைரலாகிய நிலையில், எச்சரிக்கைக்குப் பிறகு அந்நபரை JKM அப்போது விடுவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!