
ஷா ஆலம், மே 11- இந்நாட்டில் சமயத்திற்கு மட்டுமின்றி இந்திய சமூகத்தின் கல்வி மற்றும் கலாசார மேம்பாட்டிற்கும் அளப்பரிய பங்கினை ஆற்றி வரும் ஆலயங்களில் ஒன்றாக தாமான் ஸ்ரீமூடா, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் திகழ்ந்து வருகிறது.
குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவும் நோக்கில் அர்ச்சனை சீட்டுகள் வழி கிடைக்கும் வருமானத்தில் பத்து விழுக்காட்டுத் தொகையை ஷா ஆலம் இவ்வட்டாரத்திலுள்ள இரு பள்ளிகளுக்கு இவ்வாலயம் கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கி வருகிறது. தன் அடிப்படையில் இவ்வாண்டிற்கான நிதி ஒதுக்கீடாக ஷா ஆலம் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் மண்டப நிர்மாணிப்புக்கு 10,000 வெள்ளியும் கெமுனிங் உத்தாமா எமரால்ட் தமிழ்ப்பள்ளிக்கு பாட புத்தகங்களை வாங்க 3,000 வெள்ளியும் ஆலயம் சார்பாக வழங்கப்பட்டதாக ஆலயத்தின் துணைத் தலைவர் எம்.சுகுமாறன் கூறினார்.
சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் விடுக்கும் கோரிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான பொருள்களை நாங்கள் வழங்குகிறோம். ஏமரால்ட் பள்ளியின் வேண்டுகோளுக்கிணங்க அப்பள்ளிக்கு பாடபுத்தகங்களை வழங்கினோம். இதன் வழி பள்ளியில் பயிலும் சுமார் 150 மாணவர்கள் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகள் மீதான அக்கறையை வெறும் வார்த்தைகளில் மட்டும் வெளிப்படுத்தாமல் செயலிலும் காட்டும் நோக்கில் ஒவ்வொரு அர்ச்சனை சீட்டிலும் “நமது பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்புவோம்“ என்ற வாசகத்தையும் தாங்கள் இடம் பெறச் செய்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்த ஆலயத்தில் அர்ச்சனை சீட்டுகளை வாங்குவதன் மூலம் அம்பாளின் அருளைப் பெறும் அதே வேளையில் இந்நாட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழ் மொழிக்கும் பங்களிப்பை வழங்கிய மனநிறைவையும் பக்தர்கள் பெற முடியும் என அவர் குறிப்பிட்டார்.நாட்டிலுள்ள இதர ஆலயங்களும் தங்கள் வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளைத் தத்தெடுத்து இதுபோன்ற உதவித் திட்டங்களை அமல்படுத்தினால் அப்பள்ளிகள் மேம்பாடு காண்பதற்கும் இந்நாட்டில் தமிழ் மொழி தொடர்ந்து தழைத்திருப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.