டாக்கா, ஆக 11 – வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து சிறுப்பான்மை சமூகத்தினர் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை அவர்களுக்கு எதிராக 205-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டது. அந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்துக்கள் காயம் அடைந்தனர். அவர்களது வர்த்தக இடங்கள் மற்றும் வீடுகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்வேறு இந்து ஆலயங்களும் சேதப்படுத்தப்பட்டன. மேலும் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் ( Awami League) கட்சிக்கு நெருக்கமான இரு இந்து தலைவர்கள் காயம் அடைந்தனர். வன்செயலிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு ஆயிரக்கணக்கான இந்துக்கள் அண்டை நாடான இந்தியாவுக்கு தப்பியோடினர்.
டாக்காவின் பிரபலமான இந்திய உணவகமான Santoor சனிக்கிழமையன்று தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டது . சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து இந்துக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.