கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – மலேசியா-இந்தியா உறவுகளை பாதிக்காத வரை,
இஸ்லாமிய சமய போதகர் ஸாகிர் நாய்க்கின் நாடு கடத்தல் விவகாரம் குறித்து இப்போதைக்கு அப்படியே விட்டு விடுவது நல்லது என்று கூறியுள்ளார் பிரதமர் அன்வர் இப்ராஹிம்.
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணம் செய்து மலேசியாவுக்கு திரும்பி வரும் ஸாகிர் நாய்க்,
நாட்டில் அமைதியாகவே இருக்கிறார், இந்தியா அல்லது மலேசியாவுக்கு எதிராக அவதூறாக பிரச்சாரங்கள் எதனையும் அவர் செய்யவில்லை.
“இந்தியாவில் சில தரப்புகள் இதற்கான கவலையை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நாம் மதிக்கிறோம், ஆனால் ஸாகிர் மலேசியா-இந்தியா உறவுகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக இல்லாதவரை, இதை சிறிது காலம் அமைதியாக இருக்கட்டும் என்று நினைக்கிறேன்,” என்று “இந்தியா டுடே” தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அன்வார் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த பேட்டி பிரதமரின் ஆகஸ்ட் 19 முதல் 21 வரை நடந்த அதிகாரபூர்வ இந்திய பயணத்தின் போது நடைபெற்றது.
2016 முதல் சட்ட விரோத பணப் பரிமாற்றம் மற்றும் வெறுப்புணர்வு பேச்சால் தீவிரவாதத்தை தூண்டியது போன்ற குற்றங்களுக்காக இந்தியாவால் தேடப்பட்டு வருகிறார் ஸாகிர் நாய்க் என்பது குறிப்பிடத்தக்கது.