
இஸ்கண்டார் புத்ரி, ஏப்ரல்-11, ஜோகூர், ஸ்கூடாய், தாமான் நூசா பெஸ்தாரியில் நேற்று முன்தினம் ஆயுதமேந்தி மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்திற்கு, 24 மணி நேரங்களுக்குள் போலீஸ் தீர்வு கண்டுள்ளது.
கைத்துப்பாக்கியை ஒத்திருக்கும் ஆயுதத்தை வைத்து மிரட்டி மர்ம நபர் தன்னைக் கொள்ளையிட்டதாக, 35 வயது உள்ளூர் ஆடவரிடமிருந்து முன்னதாகப் புகார் கிடைத்தது.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், அதே நாளில் 27 வயது சந்தேக நபரைக் கைதுச் செய்ததாக, இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் துணை ஆணையர் எம். குமராசன் கூறினார்.
தாமான் உங்கு துன் அமீனாவில் சிக்கிய அந்த உள்ளூர் ஆடவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், ஹெல்மட், கைத்துப்பாக்கியை ஒத்திருந்த ஓர் ஆயுதம், ஒரு கைப்பேசி, 68 ரிங்கிட் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தேக நபருக்கு ஏற்கனவே 11 குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
சிறுநீர் பரிசோதனையில், அந்நபர் போதைப்பொருள் உட்கொண்டதும் உறுதியானது.
இதையடுத்து, வரும் செவ்வாய்க்கிழமை வரை அவர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.