இஸ்கந்தர் புத்ரி -நவ 28 – ஸ்கூடாய் , தாமான் டாமாய் ஜெயாவில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கார் ஒன்று தீயில் எரிந்ததைத் தொடர்ந்து 17 வயது இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் உள்நாட்டைச் சேர்ந்த 39 வயதுடைய ஆடவரிமிருந்து புகாரை பெற்றதைத் தொடர்ந்து அப்பெண் கைது செய்யப்பட்டதாக இஸ்கந்தர் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் M. குமரேசன் தெரிவித்தார்.
அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின்போது தாம் வீட்டில் இருந்ததாகவும் வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கார் தீயினால் எரிர்ந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானதாக புகார்தாரர் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்ற மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றவியல் விசாரணை அதிகாரிகள் விடியற்காலை 3.50 மணியளவில் அந்த இளம் பெண்ணை கைது செய்தனர்.
அப்பெண்ணிடமிருந்து இரண்டு கண்ணாடி போத்தல்கள், மிரட்டலுக்கான இரு எச்சரிக்கை அறிக்கைகள் , பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு கலம் மற்றும் கருநீல நிற காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
வட்டி முதலைகளிடமிருந்து பெற்ற கடனை திரும்ப செலுத்த தவறியதால் தனது வீட்டிற்கு தீவைக்கப்படும் என்ற மிரட்டல் நோட்டிசையும் புகார்தாரர் பெற்றிருந்ததாக குமரேசன் தெரிவித்தார்.