
கோலாலம்பூர், ஆக 29 – ஸ்ரீ முருகன் நிலையத்தின் 40-ஆவது ஆண்டு நிறைவு விழா மலாயா பல்கலைக்கழகத்தின் துங்கு வேந்தர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக இந்திய தூதர் பி.என் ரெட்டி கலந்து கொண்டார். இந்திய சமூகத்தில் கல்வியின் மூலம் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீ முருகன் நிலையம் இதுவரை 28,000த்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியிருப்பதாக ஏற்புரையாற்றிய ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா தெரிவித்தார். இந்த 40 ஆண்டுகால பயணத்தில் இந்தய சமூகத்தில் அதிகமான பட்டதாரிகள் உருவாகுவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறோம். எங்களது இந்த முயற்சிக்கு துணையாக இருந்த மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உட்பட ஸ்ரீ முருகன் நிலையத்தின் தொண்டூழியர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் தமது நன்றியையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய இந்திய தூதர் பி.என்.ரெட்டி இந்திய தூதரகத்தில் இதற்கு முன் துணைத் தூதராக பணியாற்றி காலம் முதல் ஸ்ரீ முருகன் நிலையத்துடன் தமக்கு நல்ல தொடர்பு இருப்பதாகவும் கல்விக்காக அவர்கள் செய்துவரும் பணி தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டார். சமூக அக்கரையுடன் கல்வியில் அந்த இயக்கம் காட்டிவரும் விழிப்புணர்வும் அவர்களது சேவையும் புனிதமான நோக்கத்தை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ ரவிந்திர மேனன், தொழிலதிபர் டத்தோ காசி, டத்தோ டாக்டர் புரவியப்பன், டத்தோ கோகிலன் பிள்ளை, உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சிரமமான நிலைமையிலும் தங்களது மகன் பிரதீபனை மாஸ்டர் பட்டம் பெற்ற பொறியியலாளராகவும், மகள் பிரியதர்ஷினியை முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியையாகவும் உருவாக்குவதற்கு பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர்களது பெற்றோர் ராமச்சந்திரன், கலைச்செல்வி தம்பதியர் சிறப்பிக்கப்பட்டனர்.
ஸ்ரீ முருகன் நிலையத்தின் வெற்றிப்பயணம் பல ஆண்டுகளுக்கு தொடர்வதற்குரிய அற்புதமான இளம் தலைமுறையினரை உருவாக்கியிருக்கிறோம். இந்திய சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவார்கள் என்றும் டான்ஸ்ரீ தம்பிராஜா தெரிவித்தார். எங்கு இருந்தாலும் இந்தியர்கள் சாதனைகளை படைத்து தன்னிகரற்று திகழ வேண்டும். அந்த வகையில் ஏழ்மை உட்பட பல்வேறு தடைகளை கடந்து சாதனை படைத்த நமது மாணவர்கள் பெற்றோருக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர். அத்தகைய மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் ஸ்ரீ முருகன் நிலையம்தொடர்ந்து பாராட்டி ஊக்குவிக்கும் என்றும் டாக்டர் தம்பிராஜா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். ம.இ.காவின் தேசிய உதவித் தலைவர் டத்தோ கோகிலன் பிள்ளை தொழிலதிபர் காசி, டான்ஸ்ரீ ரவிந்திர மேனன், டத்தோ டாக்டரர் புரவியப்பன் உடப பல பிரமுகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அழைக்கப்பட்ட பிரமுகர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக தமிழகத்தன் விஜய் டிவியின் நீயா நானா புகழ் கோபிநாத்தின் தன்முனைப்பு உரையும் இடம்பெற்றது. தங்களது பிள்ளைகளின் கல்விக்காக எல்லா சுமைகளையும் சுமந்துகொண்ட பெற்றோர்களின் தியாகங்களை நினைத்து கல்வியில் வெற்றியும் சாதனையும் படைப்பதற்கு மாணவர்கள் முன்வர வேண்டுமென கோபிநாத் வலியுறுத்தினார்.