
கோலாலம்பூர், ஆக 29 – ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலை மையத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் இணைந்து ‘என் குருவுடன் பயணம்’ என்ற நூலை ஆங்கிலம் மற்றும் மலாய் மொழியில் அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இந்நூல் வெளியீட்டு விழா கோலாலம்பூர் நுண்கலை மையத்தில் அமைந்திருக்கும் ‘சந்தானந்’ அரங்கில் மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவிற்கு, தேசிய கலை மற்றும் கலாச்சார மையத்திலிருந்து மரியாதைக்குரிய முகமட் ரைசுலி மாட் ஜூசோ,
சுஹைமி அப்துல் ரஹிம் , ராஜஸ்வரி சர்குணன் ,, டத்தோ மோகன் கிருஷ்ணன் மற்றும் டத்தின் வேளாங்கன்னி சுப்ரமணியம் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.
தீஷா நந்தினி சுகுமாறன் , மகாலெட்சுமி சுகுமாறன் மற்றும் நமீத்தா சேகர், ஆகிய மூன்று மாணவர்களும் தங்களுக்கும் தங்களது குருவான குரு நளினி ராதாக்கிருஷ் அவர்களுக்கும் இடையே அழகாய் ஊடுருவுகின்ற குரு மாணவர் பந்தத்தை அற்புதமாக இந்நூலில் எழுதியுள்ளனர். 18 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் இம்மாணவர்கள் தங்கள் குருவுடன் இக்கலைத் துறையில் பயணம் செய்திருக்கின்றனர்.
டத்தோ மோகன் வேளாங்கனி தம்பதியர், 200 பள்ளிகளுக்கு இந்நூலை வழங்குவதற்கான பொறுப்பினை ஏற்றுள்ளனர். அதே வேளையில், இவ்விழாவின் போது 15 பள்ளிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு இந்நூல் மேடையில் வழங்கப்பட்டது.
நூலை வெளியீடு செய்வதற்கான வாய்ப்பு தனக்குக் கிடைத்ததையொட்டி துவான் மொஹமட் ரைசுலி வெகுவாக பாராட்டி பேசினார்.
பரதநாட்டியத்தின் புனிதமும் சிறப்பும் அடுத்து வருகின்ற தலைமுறைக்கு கொண்டுச்செல்வதற்கான அடித்தளமாகவும் இந்நூல் விளங்கும் என அவர் தமது உரையில் மேலும் குறிப்பிட்டார்.