
சொங்லா, ஏப் 9 – Hat Yai யில் செவ்வாய்க்கிழமையன்று நகைக் கடையில் நிகழ்ந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட மலேசிய பிரஜை என நம்பப்படும் நபரை தாய்லாந்து போலீசார் தேடிவருகின்றனர்.
61 வயதுடைய அந்த ஆடவர் காலை மணி 11.50 அளவில் Plaza Hat Yai யிலுள்ள நகைக் கடையில் வாடிக்கையாளரைப்போல் நுழைந்து தனியாளாக நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக வட்டார போலீஸ் தலைவர் லெப்டனன் ஜெனரல் Piyawat Chalermasi தெரிவித்தார்.
துப்பாக்கி வைத்திருந்த அந்த சந்தேகப் பேர்வழி 1.17 மில்லியன் ரிங்கிட் அல்லது 9 மில்லியன் தாய்லாந்து Baht மதிப்புடைய நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றது அந்த நகைக்கடையில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளி மூலம் தெரியவந்தாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கு முன் ஆயுதத்தை பயன்படுத்திய கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் அந்த நபர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி தப்பிச் சென்றதாக Piyawat தெரிவித்தார்.
கொள்ளை நிகழ்ந்த நகைக்கடையிலிருந்து சற்று தொலைவில் அந்த சந்தேகப் பேர்வழி பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள் தடயியல் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அந்த நபர் தப்பியோடிவிடாமல் இருப்பதற்காக எல்லைப் பகுதியில் பாதுகாப்பை தாய்லாந்து பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக Piyawat கூறினார்.