
கோலாலம்பூர், நவ 8 – ஹமாஸ் தரப்புடனான நட்புறவை மலேசியா தொடர்ந்து நிலைநாட்டும் என்பதோடு அதனை பயங்கரவாத அமைப்பாக தண்டிக்க மாட்டோம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் தடையை மட்டுமே மலேசியா அங்கீகரிக்குமே தவிர ஒருதலைப்பட்டசமாக அமெரிக்க அமல்படுத்தும் தடையை அல்ல என அன்வார் கூறினார். பாலஸ்தீன தரப்புகளில் ஒன்றான ஹமாஸ்சை ஆதரிக்கும் வெளிநாடுகளை தண்டிப்பதற்கு மசோதா ஒன்றை அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. ஹமாஸ்சிற்கு நிதி மற்றும் ஆயுதங்கள் ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு எதிரான தடையை அறிமுகப்படுத்தும் நோகத்திலான அமெரிக்காவின் நடவடிக்கையை மலேசியா ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக தடையை அறிமுகப்படுத்தும் அமெரிக்கா உட்பட எந்த நாட்டின் முடிவையும் அரசாங்கம் அங்கீகரிக்காது என அன்வார் கூறினார்.
ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் முடிவை மட்டுமே மலேசியா அங்கீகரிக்கும். அமெரிக்காவின் முடிவை நாங்கள் ஏற்கவில்லை. இதனால் எங்களது கொள்கை மற்றும் முடிவு பாதிக்காது என நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதில் அளித்தபோது அன்வார் தெரிவித்தார். இஸ்லாமிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இது குறித்து தாம் விவாதித்ததாகவும் அந்த நாடுகள் அனைத்துமே அமெரிக்காவின் மசோதாவை ஆதரிப்பதில்லை என முடிவு செய்திருப்தாக அவர் கூறினார்.