கோலாலம்பூர், செப்டம்பர் -9 – ஹலால் சான்றிதழ் சர்ச்சையில் PH தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும்.
செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கின் (Teresa Kok) அறிக்கை PH-ன் நிலைப்பாடு அல்ல என்றால், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவிக்க வேண்டும்.
உரிமைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தம்மைப் பொருத்தவரை திரேசாவின் அறிக்கையில் எந்த தவறுமில்லை.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.
பன்றி இறைச்சியையும் மதுபானமும் பரிமாறாத முஸ்லீம் அல்லாத உணவகங்களுக்கு ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்க என்ன அவசியம் வந்தது?
ஹலால் சான்றிதழ் இல்லையென்பதற்காக ஓர் உணவகம் சுத்தமாக இல்லையென்றோ ஆரோக்கியமாக இல்லையென்றோ அர்த்தமாகி விடாது.
பார்க்கப் போனால், வியாபாரத்தில் பெரும் சவாலை எதிர்நோக்கும் சிறு-நடுத்தர மலாய்க்காரர்களுக்கே ஹலால் சான்றிதழ் விஷயத்தில் நாம் சுமையைக் கொடுக்கக் கூடாது.
எனவே, ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்குவதை விடுத்து, அதனைத் தன்னார்வ முறையில் கொண்டு வருவது வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும் என, முகநூல் பதிவில் இராமசாமி குறிப்பிட்டார்.