கோலாலம்பூர், ஆகஸ்ட்-9, பஹாங், பெந்தோங்கில் உள்ள ஹோட்டலில் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சீன நாட்டு பிரஜை மரணமடைந்ததில் ஹோட்டல் பணியாளரின் கவனக்குறைவுக்கும் பங்கிருப்பதால், கெந்திங் மலேசியா பெர்ஹாட்டும் அதன் கிளை நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டுமென, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மரணமடைந்தவரின் மனைவி தொடுத்த வழக்கில் நீதிபதி அத்தீர்ப்பை வழங்கினார்.
அவ்வாடவர் ஹோட்டல் அறையில் இறந்து கிடப்பதற்கு முன், 2 அந்நிய நாட்டு ஆடவர்களை அவ்வறையினுள் நுழைய விட்டது ஹோட்டல் அறை பணியாளரின் தவறே.
அதற்கு First World Hotel & Resorts Sdn Bhd பொறுப்பேற்றே ஆக வேண்டுமென நீதிபதி சுட்டிக் காட்டினார்.
எனவே பாதிக்கப்பட்டவருக்கு 700,000 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளை நீதிபதி உத்தரவிட்டார்.
அதோடு, செலவுத் தொகையாக 75,000 ரிங்கிட்டை வழங்க வேண்டுமென்றும் அவர் சொன்னார்.
2019 ஜூன் 19-ஆம் தேதி அங்குள்ள ஹோட்டல் அறையின் கழிவறையில் உடலில் ஆடைகள் எதுவுமின்றி அந்த சீன நாட்டு ஆடவர் இறந்துக் கிடந்தார்.
போலீஸ் விசாரணையில், அதற்கு 2 நாட்கள் முன்னர் தான் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆடவர்கள் இருவர் அந்த அறையில் நுழைந்தது தெரிய வந்தது.
அவ்விருவரும் அனுமதிப் பெற்ற விருந்தாளியா இல்லையா என்பதை உறுதிச் செய்யாமல் அவர்களை ஹோட்டல் அறைக்குள் நுழைய விட்டது, அறையைச் சுத்தம் செய்த பெண் பணியாளரின் அஜாக்கிரதையே என நீதிமன்றம் முடிவுச் செய்தது.
இறந்து கிடந்தவர், சில நாட்களுக்கு முன்னர் கேசினோ சூதாட்டத்தில் பெரும் பணத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.