
கோலாலம்பூர், ஜூலை 19 – அந்நிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதில் ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்கு உடனடி தீர்வைக் காணும்படி, தேசிய மீட்சி மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ முஹிதீன் யாசின் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சுக்களும் நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் சுணக்கம் நீடிப்பது ஏமாற்றமளிப்பதாக அந்த முன்னாள் பிரதமர் கூறினார்.
இந்நிலையில் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதற்கான நடைமுறைகள் மேலும் எளிமைப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் தொழிற்துறைகளின் தேவைகளைச் சீக்கிரம் பூர்த்தி செய்ய முடியும்.
கட்டுமானம், தோட்டத் துறை, சிறு-நடுத்தர தொழிற்துறை போன்றவற்றில் மிக அவசரமாகவும் அவசியமாகவும் அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுவதை டான்ஸ்ரீ முஹிதீன் சுட்டிக் காட்டினார்.
அந்நிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதில் ஏற்படும் தாமதம், தொழிற்துறைகளின் வளர்ச்சிக்கும் நாட்டின் பொருளியல் மீட்சிப் பணிகளுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.