
கோலாலம்பூர், மார்ச் 23 – இந்தியர்கள் தொடர்புடைய முடிதிருத்தும் தொழில், ஜவுளி மற்றும் நகை அல்லது பொற்கொல்லர் துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்த மூன்று துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ஏற்கனவே அந்த தொழில்துறை சம்பந்தப்பட்ட வர்த்தக சங்கங்கள் குரல் எழுப்பியுள்ளன.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மூன்று துறைகளிலும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மறுக்கப்பட்டதற்காக காரணம் என்ன என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான வீ.கணபதி ராவ் இன்று நாடாளுமன்றத்தில் மனித வள அமைச்சர் சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சிவக்குமார் முடிதிருத்தும் தொழில் மற்றும் ஜவுளி தொழில்துறையில் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பதால் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
எனினும் அந்நிய தொழிலாளர்களுக்கான அனுமதி வழங்குவதற்கு வெளிநாட்டு தொழிலாளர்களின் கண்காணிப்பு பிரிவும் உள்துறை அமைச்சு மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சும் பொறுப்பு வகிப்பதாக சிவக்குமார் விவரித்தார்.