
கோலாலம்பூர், டிசம்பர்-3 – RON95 பெட்ரோல் விலையை சந்தை விலைக்கு உயர்த்த வேண்டும் என்ற உலக வங்கியின் பரிந்துரையை, மலேசியா நிராகரித்துள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை மேலவையில் தெரிவித்தார்.
எனவே, இலக்கிடப்பட்ட BUDI95 மானியத் திட்டத்தின் கீழ் மலேசியர்களுக்கான விலை லிட்டருக்கு RM1.99-னாக தொடரும் என்றார் அவர்.
வெளிநாட்டவர்களுக்கான விலையாக லிட்டருக்கு RM2.60 சென் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து வகை பெட்ரோல்களின் விலைகளையும் லிட்டருக்கு RM2.65-னுக்கு உயர்த்தி, குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கலாம் என உலக வங்கி பரிந்துரைத்தது.
ஆனால் மடானி அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
மக்கள் மீது சுமையைத் திணிக்காமல், நிதி ஒழுங்கை காக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அன்வார் விளக்கினார்.
பிரதமரின் இந்த உத்தரவாதம், மலேசியர்களுக்கு எரிபொருள் விலை நிலைத்தன்மையை உறுதிச் செய்கிறது.



