ஒற்றுமை அரசாங்கத்தில் இணையும் தே.மு முடிவிற்கு இருவர் மட்டுமே ஆதரிக்கவில்லை ; சாஹிட்

கோலாலம்பூர், ஜன 13 – ‘St. Regis நடவடிக்கை’ எனப்படும் பின் கதவின் வழி பெரிக்காத்தான் நெஷனலுடன் , ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதை தாம் அறிவேன் என , அம்னோ தலைவர் Datuk Seri Dr. Ahmad Zahid Hamidi கூறியிருக்கின்றார்.
எனினும் , அதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து தாம் இனி ஏதும் பேசவிரும்பவில்லை எனக் கூறிய அவர், ஒற்றுமை அரசாங்கத்தில் இணையும் தேசிய முன்னணியின் முயற்சிக்கு இருவர் மட்டுமே ஆதரிக்கவில்லை எனவும், 54 பேர் அதற்கு ஆதரவளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதையடுத்து, பாக்காத்தான் ஹராப்பானுடன் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற எடுக்கப்பட்ட முடிவு, ஒருமித்து எடுக்கப்பட்ட முடிவு என சாஹிட் கூறினார்.
அத்துடன், ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க பேரரசரிடம் வழங்கிய உறுதிக்கு ஏற்பவும், தேசிய முன்னணி அந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க, பக்காத்தான் ஹராப்பான் இணங்கியிருந்த நிலையில், பெரிக்காத்தான் அதை நிராகரித்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், பெரிக்காத்தான் 73 இடங்களை வென்றிருந்த நிலையில் , பக்காத்தான் 82 இடங்களை வென்றிருந்தது. அதன் வழி மக்கள் பக்காத்தானுக்கே பேராதரவை வழங்கியிருந்தனர். அதன் அடிப்படையில், பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தரப்புடன் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டதாக சாஹிட் கூறினார்.
அம்னோ பொதுப் பேரவையில், கொள்கையுரையாற்றிய சாஹிட் தேசிய முன்னணி , ஏன் பெரிக்காத்தானுக்குப் பதிலாக பாக்காத்தானை தேர்வு செய்தது என்பது குறித்து விளக்கமளித்தார்.