
கோலாலம்பூர், டிச 2 – கடந்த சனிக்கிழமை, தனது காதலியின் இரண்டு சகோதரர்கள் மற்றும் மாமாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, (PVC) குழாயால் தாக்கப்பட்டதால் மாணவர் ஒருவர் காயம் அடைந்தார்.
கோலாலம்பூர் கம்போங் செராஸ் பாருவில் உள்ள தனது காதலியை அவரது வீட்டிற்கு அதிகாலை மணி 1.40 மணிக்கு கொண்டு விட்டபோது 22 வயதுடைய அந்த மாணவர் தாக்கப்பட்டதாக அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் துணை ஆணையர் கைருல் அனுவார் காலிட் ( Khairul Anuar Khalid ) தெரிவித்தார்.
தனது காதலியின் சகோதரர் காலில் PVC குழாயால் அடித்ததோடு முகத்தில் இரத்தம் வரும்வரை குத்தியிருப்பதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
அதோடு தனது காதலியை வெளியே அழைத்துச் சென்றால் கொல்லப்போவதாகவும் அவரது உறவினர் மிரட்டியதால் பாதிக்கப்பட்ட இளைஞர் அச்சம்பவம் தொடர்பில் விடியற்காலை மணி 4.50 அளவில் போலீசில் புகார் செய்துள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் Khairul குறிப்பிட்டார். இதனிடையே இச்சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் முதல் மற்றும் மூன்றாவது சந்தேகப் பேர்வழிகளுக்கு குற்றச்செயல் பின்னணி எதுவும் இல்லை. எனினும் இரண்டாவது சந்தேகப் பேர்வழிக்கு இதற்கு முன் ஒரு குற்றப் பின்னணி இருப்பதும் தெரியவந்துள்ளது. சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் விசாரணைக்கு உதவும் பொருட்டு நாளைவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.



