
கோலாலம்பூர், ஆக 10 – மாட் ரெம்பிட் எனப்படும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுவோருக்கான அபராதத் தொகையை சிறிய அளவில் உயர்த்துவதால் அத்தகைய பந்தயங்கள் குறையப் போவதில்லை என DAP யின் தலைவர் லிம் குவான் எங் ( Lim Guan Eng ) தெரிவித்திருக்கிறார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு இரண்டு மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கும்போது, மரணத்தை ஏற்படுத்தும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுவோருக்கு மட்டும் அபராதம் குறைவாக இருப்பது ஏன் என போக்குவரத்து அமைச்சர் டாக்டர் வீ கா சியோங்கை லிம் குவான் எங் வினவினார்.
மேலும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தின்போது பிடிபடும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு காப்புறுதி தொகையை உயர்த்தும் போக்குவரத்து அமைச்சின் ஆலோசனையையும் அவர் சாடினார். சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுவோரில் பலர் அவர்களது மோட்டார் சைக்கிளுக்கான காப்புறுதியை கொண்டிருக்கவில்லை என்பதால் அது அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்பாடுத்தாது என்றும் லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார்.