
ஜகார்த்தா, நவம்பர்-26 – இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரேபிஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளது.
உயிருள்ள விலங்குகள், சமைக்கப்படாத அவற்றின் இறைச்சிகள் அல்லது சமைக்கப்பட்ட உணவுகளையும் அத்தடை உள்ளடக்கும்.
ஏற்கனவே அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப அந்த ஆணையில் தாம் கையெழுத்திட்டுள்ளதாக ஜகார்த்தா ஆளுநர் Pramono Anungum அறிவித்தார்.
இன்னும் 6 மாதங்களில் அவ்வுத்தரவு அமுலுக்கு வரும்.
தடையை மீறுபவர்களுக்கு எதிராக, எழுத்துப்பூர்வ எச்சரிக்கை வழங்கப்படுவது தொடங்கி வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படுவது வரை நடவடிக்கைப் பாயும் என Pramono சொன்னார்.
இது ஒரு முக்கிய முன்னேற்றம் எனக் கூறி விலங்கு நல ஆர்வலர்கள் இவ்வறிவிப்பை பெரிதும் வரவேற்றுள்ளனர்.
நாய், பூனை இறைச்சிகளின் விற்பனையை இன்னமும் அனுமதிக்கும் ஒரு சில நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்றாகும்.
எனினும், அந்நடைமுறைக்கு எதிரான போராட்டங்களுக்கு அண்மையக் காலமாக ஆதரவு அதிகரித்து, பல நகரங்களில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில் 25 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.



