Latestமலேசியா

பிரதமர் பதவி விலகினார்; அரண்மனை உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர், ஆக 16 – பிரதமர் முஹிடின் யாசின் மற்றும் அமைச்சரவையின் பதவி விலகலை மாட்சிமை தங்கிய பேரரசர் ஏற்றுக்கொண்டார். புதிய பிரதமர் பதவி ஏற்கும்வரை பராமரிப்பு அரசாங்கத்தின் இடைக்கால பிரதமராக முஹிடின் இருந்து வருவார் என அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இதற்கு முன் அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சூகி அலி, சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருன் மற்றும் தேர்தல் ஆணைய தலைவர் டத்தோ ஹாஹி அப்துல் கனி சலே ஆகியோரையும் இன்று காலை 11 மணியளவில் பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் ஹாஜி அகமட் ஷா சந்தித்தார். நண்பகல் மணி 12.30 அளவில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுடன் 30 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்.

அமைச்சரவைக்கு தலைமையேற்கும் வகையில் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை புதிய பிரதமராக நியமிப்பதற்கு பேரரசர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதோடு 2020 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பெரிக்காத்தான் நேசனல் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது முதல் கோவிட் நெருக்கடிக்கு எதிராக சிறந்த நடவடிக்கை மேற்கொண்டதற்காகவும் பிரதமர் முஹிடின் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் பேரரசர் தமது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

ஆகஸ்டு 10 ஆம் தேதிவரை 613 சட்டமன்ற தொகுதிகளில் 484 இடங்களில் கோவிட் தொற்று அபாயகரமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதோடு நாட்டின் சுகாதார வசதிகள் கவலையளிக்கும் வகையில் இருப்பதையும் பேரரசர் கவனத்தில் எடுத்துக்கொண்டார். எனவே சுகாதாரம் மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு 15 ஆவது பொதுத் தேர்தல் நடத்துவது பாதுகாப்பானதாகவும் இருக்காது என்பதையும் அவர் உணர்ந்துள்ளார்.

கோவிட்டினால் மக்களின் நலன் மற்றும் பொருளாதாரம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் சுபிட்சத்திற்காக க அரசியல் நெக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் பேரரசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என இஸ்தானா நெகாரா அதிகாரி அகமட் பாட்ஷீல் சம்சுடின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!