Latestமலேசியா

காலுறையில் ‘அல்லாஹ்’ வார்த்தைப் பொறிக்கப்பட்ட விவகாரம்: மாமன்னர் சினம், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

கோலாலம்பூர், மார்ச் 19 – பிரபல பல்பொருள் கடையொன்றில் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தைப் பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சம்பவம் குறித்து பேரரசர் கடும் சினமடைந்துள்ளார்.

அச்சம்பவம் குறித்து வெரும் வேதனையும் தெரிவித்த சுல்தான் இப்ராஹிம், அதற்குக் காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“அல்லாஹ் என்பது முஸ்லீம்களால் அதி உன்னதமான இடத்தில் வைத்துப் போற்றப்படும் புனிதச் சொல்லாகும்; அதோடு இது ரமலான் நோன்பு மாதம் வேறு. இப்படி பட்ட நேரத்தில் முஸ்லீம்களை சினமூட்டும் செயல்கள் நடைபெறுவது வேதனைக்குரியது” என மாமன்னர் கூறினார்.

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில், ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும் என்று, அண்மையில் தான் நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது நான் நினைவுறுத்தியிருந்தேன் என்றார் அவர்.

அச்சம்பவம் தற்செயலாக நடந்ததா இல்லையா; சர்ச்சைக்குரிய அக்காலுறைகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது உள்ளூர் தொழிற்சாலையில் தயாரானவையா என்பது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை; விசாரணைகள் முடிந்ததும், சம்பந்தப்பட்டோர் மீது சட்டப்படி மிக மிகக் கடுமையான நடவடிக்கைகள் பாய வேண்டும் என மாமன்னர் உத்தரவிட்டார்.

மலேசியர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனத்தால், இது போன்ற உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களில் மெத்தனமாக இருப்பதை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் அவர்.

நீண்ட நெடிய காலமாக பல்லின மக்களோடு நாம் வாழ்ந்து வருகிறோம்; நிலைமை இப்படியிருக்க, இன-மத விவகாரங்களை உட்படுத்திய இது போன்ற தவறுகளை ஏற்க முடியாது; இனியும் நடக்கக் கூடாது என மாமன்னர் எச்சரித்தார்.

சர்ச்சைக்குரிய அக்காலுறைகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சம்பவத்திற்காக KK Mart நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அச்சம்பவம் தொடர்பில் இதுவரை 36 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!