
சிலாங்கூர், ஜூலை 27 – கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரத்தின் பல இடங்களில் இன்று மின் விநியோகத் தடை ஏற்பட்ட நிலையில் அச்சமயத்தில் மின் தூக்கிகளினுள் ஆட்கள் சிக்கிக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன.
சிலாங்கூர் மாநிலத்தில் அவ்வாறு மின் தூக்கியினுள் ஆட்கள் சிக்கிக் கொண்டது தொடர்பாக இன்று 11 அவசர அழைப்புகளைத் தாங்கள் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கை மையத் தலைவர் சுல்ஃபிகார் ஜாஃபார் (Zulfikar Jaffar) தெரிவித்தார்.
செக்ஷன் 13ல் உள்ள பிஜே செண்டர் ஸ்தேஜ் (PJ Centre Stage), லிபெர்டி (Liberty) ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு, தாமான் ஸ்ரீ செந்தோசா அடுக்குமாடி குடியிருப்பு, MIEC கட்டிடம், மெட்ரோ எவனியூ காஜாங் (Metro Avenue Kajang), ஐகோன் சிட்டி (Icon City) உள்ளிட்ட இடங்களிலுள்ள மின் தூக்கிகளில் இன்று ஆட்கள் சிக்கிக் கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
நல்ல வேளையாக அச்சம்பவங்களில் யாருக்கும் காயம் உள்ளிட்ட வேறெந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சுல்ஃபிகார் தெரிவித்தார்.