
சிரம்பான், ஏப் 17 – நெகிரி செம்பிலானில் பல்வேறு இடங்களில் வழக்கத்திற்கு மாறாக கடுமையாக மழை பெய்ததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக அம்மாநில மந்திரிபுசார் டத்தோஸ்ரீ Aminuddin Harun தெரிவித்திருக்கிறார். இரண்டு மணி நேரத்தில் 93 மில்லி மீட்டர் மற்றும் 75 மில்லி மீட்டர் மழை பெய்ததாக சிரம்பான் மற்றும் ரெம்பாவ் வானிலை சேவைத்துறையின் தகவல் தெரிவித்ததாகவும் இது வழக்கத்தைவிட கடுமையான மழை என்று அவர் சுட்டிக்காட்டினார். கடுமையான மழை பெய்த போதிலும் 2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தைப் போல் இல்லையென அவர் தெரிவித்தார். பெரும்பலான இடங்களில் 0.3 மீட்டர் முதல் 0.6 மீட்டருக்கிடையே நீர்மட்டம் இருந்ததோடு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே நீர் மட்டம் குறைந்ததாக மாநில ஆட்சிக்குழு கூட்டத்திற்கு தலைமையேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசியபோது Aminuddin தெரிவித்தார்.
சிரம்பான் நகர் மற்றும் Jalan Rasah வில் வெள்ளம் ஏற்படவில்லை என்பதால் அங்குள்ள வர்த்தக மையங்களிலும் பாதிப்பு ஏற்படவில்லை என அவர் கூறினார். நேற்று இரவில் பெய்த கடுமையான மழையினால் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் நேற்றிரவும் இன்று காலையும் சிரம்பான், ரெம்பாவ் மற்றும் போர்ட் டிக்சனில் உள்ள இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.