கோலாலம்பூர், பிப் 7- குறைந்த அல்லது அறிகுறி அற்ற பிரிவு-1 மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட பிரிவு-2A நிலைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட கோவிட் நோயாளிகள் CAC எனப்படும் கோவிட் தொற்றின் பாதிப்பு தன்மையைக் கண்டறியும் பரிசோதனை மையங்களுக்குச் செல்லத் தேவையில்லை.
மாறாக, வீட்டிலிருந்தபடியே MySejahtera செயலியில் வழங்கப்பட்டுள்ள HAT எனப்படுகின்ற மதிப்பீட்டுப் பாரத்தைத் தினசரி பூர்த்தி செய்து சுய சுகாதார கண்காணிப்பை மேற்கொண்டால் போதுமானது என சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
தினசரி அந்தக் கண்காணிப்பை மேற்கொள்ளத் தவறுபவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவோ தானியங்கி அழைப்பின் வாயிலாகவோ நினைவுறுத்தல் அனுப்பப்படும்.
இதனிடையே, காய்ச்சல், சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளால் அவதியுறும் 2B பிரிவு நோயாளிகளும் மோசமான பாதிப்பை எதிர்நோக்கியிருப்பவர்களும் விரைந்து அருகிலுள்ள CAC மையத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தப்படுவதாக நோர் இஷாம் கூறினார்.