ஐயோவா, ஆகஸ்ட்-14, அமெரிக்காவின் ஐயோவா (Iowa) மாநிலத்தில் 2009-ஆம் ஆண்டு காணாமல் போன இளைஞர், பத்தாண்டுகளுக்குப் பிறகு தான் வேலை பார்த்த இடத்தில் குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.
மூன்றாண்டுகளாக மூடப்பட்டிருந்த சூப்பர் மார்கெட்டை மீண்டும் சீரமைப்பதற்காக 2019-ல் திறந்த போது, அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியின் பின்னால் அழுகிய நிலையில் ஒரு மனித உடல் கண்டெடுக்கப்பட்டது.
உடலைக் கைப்பற்றி மரபணு சோதனை நடத்திய போலீசுக்கு அங்கு தான் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த உடல் 2009-ஆம் ஆண்டில் காணாமல் போன லேரி எலி முரில்லோ – மோன்காடா (Larry Ely Murillo-Moncada) எனும் 25 வயது ஆடவருடையது என கண்டறியப்பட்டது.
மேலேறி துடைத்துக் கொண்டிருந்த போது, குளிர்சாதனப் பெட்டிக்கும் சூப்பர் மார்கெட்டின் சுவருக்குமிடையில் உள்ள வெறும் 45 சென்டி மீட்டர் அளவிலான குறுகிய இடத்தில் லேரி தவறி விழுந்திருக்கக் கூடும்.
ஆனால், இத்தனை ஆண்டுகளாக அவர் கண்டுபிடிக்கப்படாமல் போனதற்கு என்ன காரணம் என முக்கியக் கேள்வி எழுந்துள்ளது.
அதை விட இன்னொரு விஷயம் – லேரி குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் சிக்கிக் கொண்டு இறந்த பிறகும் சூப்பர் மார்கெட் ஏழாண்டுகளாக இயங்கியுள்ளது.
தவறி விழுந்த பிறகு லேரி நிச்சயம் உதவிக் கோரி கத்தியிருப்பார்; சூப்பர் மார்க்கெட் உள்ளேயும் வெளியேயும் இருந்தவர்களில் ஒருவருக்குக் கூடவா அது கேட்டிருக்காது? என கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால், அதற்கும் போலீசிடம் அதில் உள்ளது; அதாவது 12 அடி உயரம் கொண்ட பெரிய குளிர்சாதனப் பெட்டியில் இருந்த வந்த சத்தம், லேரியின் கூக்குரலை கேட்காமல் செய்திருக்கும் என்பதே.
மற்றபடி, அவரது மரணத்தில் வேறெந்த தவறும் நடந்திருக்க வாய்ப்பில்லையென போலீஸ் கூறியது.
தங்களது மகன் காணாமல் போவதற்கு முன்பு ஏதோ பித்துபிடித்தது போல நடந்துக் கொண்டதாக லேரியின் பெற்றோர் போலீஸ் புகாரில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.