
கோலாலம்பூர், ஜூன் 24 – 11 ஆவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஜூலைத் திங்கள் 21,22,23 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு ஏழு மணிவரை நடைபெறுகிறது . 1966ஆம் ஆண்டு தனிநாயகம் அடிகளாரின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக முதலாவது உலக தமிழ் ஆராய்சி மாநாட்டை வெற்றிகரமாக மலாயா பல்கலைக்கழகம் நடத்தியதோடு அதன் பின்னர் ம.இகாவின் முன்னாள் தேசிய தலைவர் துன் சாமிவேலு – மக்கள் தொண்டன் டாக்டர் வி டேவிட் ஆகியோர் முயற்சியில் 6ஆவது உலகச் தமிழராய்சி மாநாடு மீண்டும் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் உட்பட உலகின் பல அறிஞர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து 9ஆவது உலகக் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் கோலாலம்பூரில் 2015ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இப்போது மீண்டும் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வில் துறையின் ஒத்துழைப்போடு 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி மலேசிய பேராளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆர்வலர்கள் விரைவில் பேராளர்களாக பதிந்து கொள்ளுமாறு மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் கோ. வி சிவபாலன் கேட்டுக் கொண்டார்.