
இங்கிலாந்து, நவம்பர் 11 – டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்குவதற்கு முன், அதன் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு உணவு மெனு, 50 ஆயிரம் யூரோவிலிருந்து 70 ஆயிரம் யூரோ வரையில் ஏலத்தில் விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் பிரசித்தி பெற்ற டைடானிக் ஆடம்பர சுற்றுலா கப்பல், 1912-ஆம் ஆண்டு, ஏப்ரல் 11-ஆம் தேதி, அட்லாண்டிக் பெருங்கடலில், பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.
கடல் பயண வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான அந்த விபத்தில், கப்பலில் பயணித்த ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அந்த கப்பல் விபத்துக்குள்ளாவதற்கு முன், பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவு பட்டியல் அண்மையில் வைரலானது.
கப்பலில் பயணித்த வரலாற்று ஆசிரியரான கனடாவைச் சேர்ந்த டென் ஸ்டீபன்சன் என்பவர், டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை வைத்திருந்தார்.
அது அவரது குடும்ப உறுப்பினர் உட்பட யாருக்கும் தெரியாது.
2017-ஆம் ஆண்டு, ஸ்டீபன்சன் காலமான பிறகு அவரது உடமைகளை மகளும், மருமகளும் பார்வையிட்ட போது தான், டைட்டானிக் உணவு பட்டியல் குறித்து அவர்களுக்கு தெரிய வந்தது.
விரைவில் ஏலத்திற்கு வர உள்ள அந்த உணவுப் பட்டியலில், இறைச்சி வகைகள் உட்பட பல உயர்தர உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.