
கோலாலம்பூர், செப் 11 – 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால மறு ஆய்வு அறிக்கையை இன்று நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமர்ப்பிப்பார். இன்று காலை 10 மணியளவில் பிரதமர் இந்த அறிக்கையைச் சமப்பிப்பார். இதன் காரணத்தினால் நாடாளுமன்றத்தின் பிற்பகல் கூட்டம் இன்று இருக்காது . நாளை செவ்வாக்கிழமை தொடங்கும் இது தொடர்பான விவாதம் வியாழக்கிழமை வரை
நடைபெறும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அடுத்த வாரம் திங்கட்கிழமையும் செவ்வாக்கிழமையும் அமைச்சர்கள் பதில் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இந்த சிறப்புக் கூட்டம் மலேசிய நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடூயுப் சேனல் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி நிலையங்களிலும் நேரலையாக இடம்பெறும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆவது பொதுத் தேர்தல் நடைபெற்தைத் தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்ட பின் முதல் முறையாக 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால மறு ஆய்வு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி 400 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டைக் கொண்ட 12 ஆவது மலேசியா திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. நாடு முழுமையாக மேம்பாடு அடையும் நோக்கத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரைக்குமான ஐந்து ஆண்டு காலத்திற்கான அந்த 12 ஆவது மேம்பாட்டுத் திட்டம் கொண்டிருந்தது.