
புத்ராஜெயா, நவம்பர் 8 – “ஒரு முறை கற்பழித்தலே மன்னிக்க முடியாத குற்றம். நீங்கள் செய்ததோ நூறு முறைக்கும் மேல்”
2018-ஆம் ஆண்டிலிருந்து ஈராண்டுகளாக தனது 12 வயது மாற்றான் மகளை 105 முறை கற்பழித்த காமுகன் செய்த மேல்முறையீட்டை செவிமடுத்த நீதிபதி கூறிய வார்த்தைகள் அதுவாகும்.
அதனால், 36 வயதான அவ்வாடவனுக்கு இதற்கு முன் விதிக்கப்பட்ட 42 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், 24 பிரம்படிகளையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு, ஒருமனதாக அந்த முடிவை அறிவித்தனர்.
காஜாங்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் அவ்வாடவன் மன வருந்தி திருந்தி விட்டதாகவும், அவனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை குறைக்கப்பட்டு, சமூகத்தில் வாழ அவனுக்கு நீதிமன்றம் வாய்ப்பளிக்க வேண்டுமெனவும், அவனது தரப்பில் மேல்முறையீட்டை தாக்கல் செய்திருந்த வழக்கறிஞர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். எனினும், அந்த மனுவிற்கு அரசாங்க தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
முன்னதாக, 2012-ஆம் ஆண்டு, ஜனவரியில், சொந்த மாற்றான் மகளை 105 முறை கற்பழித்த அந்த காமுகனுக்கு, 1050 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 24 பிரம்படிகளும் விதித்து கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டத்தின் எம்.குணசுந்தரி தீர்ப்பளித்திருந்தார்.
எனினும், கடந்தாண்டு மார்ச்சில், அந்த வழக்கின் மேல்முறையீட்டை செவிமடுத்த கிள்ளான் உயர்நீதிமன்றம், அவ்வாடவனுக்கான சிறைத் தண்டனையை 42 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.