கோலாலம்பூர்-நவம்பர்-14, அக்டோபர் வரைக்குமான நிலவரப்படி, பொது மக்களுக்குச் சொந்தமான 12.8 பில்லியன் ரிங்கிட் இன்னும் உரிமைக் கோரப்படாமல் உள்ளது.
நிறுவனங்கள் ஒப்படைத்த மொத்தத் தொகையான 17 பில்லியன் ரிங்கிட்டில், மேற்கண்ட தொகை கோரப்படாமல் அப்படியே இருப்பதாக, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் அம்சா அசிசான் (Datuk Seri Amir Hamzah Azizan) தெரிவித்தார்.
வெறும் 4.2 பில்லியன் ரிங்கிட் மட்டுமே உரியவர்களால் உரிமைக் கோரப்பட்டிருப்பது, மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வு போதவில்லை என்பதையே காட்டுவதாக அவர் சொன்னார்.
என்றாலும் தேசியக் கணக்கியல் துறை பொது மக்கள் மட்டுமின்றி நிறுவனங்கள், கழகங்கள், ஊராட்சி மன்றங்கள் உள்ளிட்ட தரப்புகளுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாண்டு மட்டும் இதுவரை 108 விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக மக்களவைக் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் சொன்னார்.
கோரப்படாத பணத்தை, தேசியப் பதிவுத் துறையின் அண்மையத் தரவுகளின் மூலம் வாரிசுத்தாரர்களை கண்டுபிடித்து, நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் போடலாமே என முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையும் ஆராயப்படுமென்றார் அவர்.