
புத்ரா ஜெயா, மார்ச் 21 – ஜோகூர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிகமாட் மற்றும் பத்து பஹாட் மக்களுக்கு தன்னார்வ உதவித்திட்டத்தில் பங்கேற்க முன்வந்த நாடு தழுவிய நிலையிலான 1,520 அரசு ஊழியர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். ரமடானுக்கு முன்னதாக நல்லதொரு தொடக்கம் இதுவென அவர் வருணித்தார். பாதிக்கப்பட்ட இடங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் அந்த அரசு ஊழியர்கள் உதவிப் பொருட்கள் அடங்கிய கூடை மற்றும் பள்ளிப் பிள்ளைகளுக்கு தேவையான அடிப்படை உதவிகளையும் வழங்குவார்கள்.
இது தவிர வாகனங்கள், மின்சாரப் பொருட்கள் ஆகியவற்றின் சின்ன சின்ன பழுதுகளையும் அவர்கள் சரி செய்வார்கள். அதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் ரீதியில் ஆதரவு வழங்கும் வகையில் அவர்களை சந்தித்து கலந்துரையாடுவார்கள். அவர்களது அந்த நடவடிக்கையில் 26 பஸ்கள் , 16 வேன்கள், எட்டு லோரிகள், 64 சக்கர வாகனங்கள் மற்றும் 39 கார்கள் என 153 வாகனங்களும் இடம்பெற்றுள்ளன.