அலோர் பொங்சு, டிசம்பர் 29 – மலேசியாவின் கல்வி வரலாற்றில் ஓர் அடையாளமாகத் திகழும் கூலாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி, தனது 122ஆம் ஆண்டு வரலாற்று விழாவை கடந்த டிசம்பர் 29 அன்று வெகுவிமர்சையாகக் கொண்டாடியது.
1902ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இப்பள்ளி, தோட்டப்புறத்தில் தொடங்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளியாகும்.
1950களில் இப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மலாய்க்கார மாணவர்கள் கல்வி பயின்றனர் என்பது இப்பள்ளியின் பெருமைக்குரிய வரலாற்று மைல்கல்லாகும்.
இவ்விழாவில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கம், அலோர் பொங்சு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அஜி சாம் பின் மாட் சஹாட் (Dato’ Hj. Sham Mat Sahat) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நிலையில், சுமார் 800க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு உற்சாகத்தை கூட்டினர்.
மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் முகமை அமைப்பாளர் பாஸ்கரன் அவர்களும் கலந்துகொண்டு, தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் மூத்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் சாதனை மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியக் குழு மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் இணைந்து இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.