புத்ராஜெயா, செப்டம்பர் 9 – 2024/2025ஆம் ஆண்டின் கல்வி தவணைக்கான 448,113 மாணவர்களில் கிட்டத்தட்ட 28 சதவீதம் பேர் இன்னும் வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்ணுவதில் தேர்ச்சி பெற்றவில்லை என்று கல்வி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜூலை மாதத்தில், ஆசிரியர்களால் நடத்தப்பட்ட முன் சோதனையின் மூலம் கல்வி அமைச்சின் எழுத்தறிவு மற்றும் எண்ணியல் தலையீட்டு திட்டத்திற்காக 122,062 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டதாக அதன் இயக்குநர் அஸ்மான் அட்னான் கூறினார்.
இந்த திட்டம், கடந்த மாதம் தொடங்கிய நிலையில், மாணவர்கள் மூன்று மாதக் காலத்திற்கு, கல்வியறிவு மற்றும் எண்ணியல் சார்ந்து தேர்ச்சி பெறுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் பெறுவார்கள் என்றார், அவர்.
மூன்று மாதத் தலையீட்டிற்குப் பிறகு மற்றொரு மதிப்பீடு நடத்தப்படும். அவர்கள் தேர்ச்சி பெற்றால், மீண்டும் வழக்கம் போல முதலாம் வகுப்பிற்குச் செல்வார்கள். இல்லையெனில், மற்றொரு சுற்று தலையீட்டிற்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் விளக்கமளித்தார்.
இந்த தலையீடு வகுப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களால் தீர்மானிக்கப்படும் தகுதியைப் பொறுத்தது என்று அஸ்மான் கூறினார்.