
கோலாலம்பூர், ஜன 30 – விரைவில் 1,300 இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண்கள் நாட்டிற்குள் தருவிக்கப்படவிருக்கின்றனர்.
கடந்தாண்டு ஏப்ரல் முதல் நாட்டிற்குள் வேலை செய்ய 800 இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண்கள் கொண்டு வரப்பட்டனர் . தற்போது கூடுதலாக மேலும் 1,000-கும் அதிகமானோர் கொண்டுவரப்படவிருப்பதாக மலேசியாவுக்கான இந்தோனேசிய துணை தூதர் Rossy Verona தெரிவித்தார்.
இதனிடையே, 2022 டிசம்பர் வரையில் குடிநுழைவு துறையுடன் பதிந்து கொண்ட மொத்தம் 3 லட்சத்து 93,000 இந்தோனேசிய தொழிலாளர்கள் நாட்டில் வேலை செய்வதாக அவர் கூறினார்.
கடந்தாண்டு ஏப்ரலில் மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் கையெழுத்தான கருத்திணக்க உடன்படிக்கையின் வாயிலாக, அவ்விரு நாடுகளுக்கு இடையில் தொழிலாளர் தருவிப்பு நடவடிக்கைகள் சுமூகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அந்த கருத்திணக்க உடன்படிக்கையின் வாயிலாக, ஒரு இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்ணை தருவிக்கும் அதிகபட்ச செலவு 15,000 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பணிப் பெண் , 6 பேருக்கும் மேற்போகாத ஒரு வீட்டில் மட்டுமே வேலை செய்ய முடியும். குறைந்தபட்சம் 1,500 ரிங்கிட் சம்பளம் மாதம் தொடங்கி 7-வது நாளில் வழங்கப்பட்டு விட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.