
ஈப்போ டிச, 28 – ஈப்போவில் சிறப்புடன் செயல்பட்டு வரும் உமா பரத நிர்த்தியம் நாட்டியப் பள்ளியில் பரதம் பயின்று வரும் மாணவிகளில் 14 பேருக்கு சலங்கை பூஜை சிறப்புடன் நடைபெற்றது. கடந்த 30 ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் இந்த நாட்டிய பள்ளியில் சுமார் 500 மாணவர்களுக்கு சலங்கை பூஜை நடைபெற்றுள்ளதுடன் சுமார் 150 மாணவர்கள அரங்கேற்றம் கண்டுள்ளனர் என்று அப்பள்ளியின் நடன ஆசிரியை ஸ்ரீ மதி உமா தேவி சிவபாலன் கூறினார். ஈப்போவில உள்ள ஸ்ரீ ஏ. கே. எஸ். மண்டபத்தில் 14 மாணவிகளுக்கு சிறப்பான முறையில் நடைபெற்ற சலங்கை பூஜை நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இதில் வி. உமாமகேஸ்வரி, ஜே. ஷாயி ஷாய்ஜினி, எஸ். அவினாஸ்ரீ , பி. வனஜா, தி. அபினியா அட்விகா, ஆர். நிரஞ்சனா சாய் நாயர், சிவானிஸ்ஸ்ரீ , எஸ். நிவேதாஸ்ரீ , எஸ். கேஷிகா நாயர் , கோ. லஷ்னா தாரணி, பி. ஹாஷனி, என். ரிதிகா , சி. யுவஸ்ரீ , கோ. தரனியா ஆகிய மாணவிகள் சலங்கை பூஜை கண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் டத்தோ டாக்டர் சந்திரவதனி பஞ்சாட்சரம், மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் வ. ஜெயபாலன், ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா தலைவர் எம். விவேகானந்தன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
இதில் சிறப்புரையாற்றிய டாக்டர் வ. ஜெயபாலன் , தெய்வீக கலையான பரதக் கலையை கற்பதின் வழி நல்ல சிந்தனை ஆற்றல்கள் உருவாகும் என்றார். இந்தியரின் பண்பாட்டு நாகரீகத்தை உலகிற்கு பறைசாற்றுவதில் நடனக் கலை பெரும் பங்காற்றியுள்ளது. இவ் உலகில் மென்மேலும் நம்முடைய கலை பண்பாடுகள் நிலை நிறுத்த வாழ , வளர நமது பங்களிப்பு மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.