
கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலை நடத்துவது 100 கோடி ரிங்கிட் செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பொதுத் தேர்தலை நடத்தி முடிக்க ஆன செலவை விட இம்முறை 2 மடங்கு அதிகச் செலவாகும் என தேர்தல் ஆணையம் கணித்துள்ளது.
பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, பல்வேறு சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதற்கு ஆகும் செலவும் அதில் அடங்கியிருப்பதாக, தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கனி சாலே (Abdul Ghani Salleh) தெரிவித்தார்.
எந்நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இம்முறை பொதுத் தேர்தலில் 2 கோடியே 11 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவ்வெண்ணிக்கை கடந்த முறையை விட 41.6 விழுக்காடு அதிகம் என்றும் அவர் சொன்னார்.
பொது மக்கள் தங்களின் வாக்காளர் பதிவு விவரங்களை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கங்கள் வாயிலாகச் சரிபார்த்துக் கொள்ள ஊக்குவிக்கப்படுவதாகவும் அப்துல் கனி கூறினார்.
பொது மக்கள் https://www.spr.gov.my அல்லது https://mysprsemak.spr.gov.my எனும் அகப்பக்கங்கள் வாயிலாக வாக்காளர் பதிவு விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.