
புத்ராஜெயா, அக் 20 – 15-வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தினம் நவம்பர் 19- ஆம் தேதி என தேர்தல் ஆணையத் தலைவர் Tan Sri Abdul Ghani Salleh அறிவித்தார்.
முன்கூட்டியே வாக்களிக்கும் நாள் நவம்பர் 15- ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் நவம்பர் 5- ஆம் தேதி நடைபெறுமெனவும், தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்கு 14 நாட்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
இவ்வேளையில், பெர்லிஸ், பேராக், பகாங் சட்டமன்றங்களுக்கான தேர்தலும், சபா, Bugaya இடைத் தேர்தலும் , பொதுத் தேர்தல் தினத்தன்றே ஒரு சேர நடத்தப்படும்.
பாஸ் ஆட்சி செய்யும் கிளந்தான், கெடா, திரெங்கானு மாநில அரசாங்கங்களும், பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி செய்யும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் , பினாங்கு மாநில அரசாங்கங்களும் , தத்தம் சட்டமன்றங்களை கலைக்கப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதை அடுத்து, அந்த மாநிலங்களில் , சட்டமன்றத் தேர்தல் நடைபெறாது.
இவ்வேளையில், 15-வது பொதுத் தேர்தலையும், Bugaya இடைத் தேர்தலையும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு 1.01 பில்லியன் ரிங்கிட் செலவாகுமென கணிக்கப்பட்டுள்ளது.
இம்முறை, 15 –வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க, 2 கோடியே, 11 லட்சத்து 73 ஆயிரத்து 638 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
அஞ்சல் வாக்குகளுக்கான பதிவு நடவடிக்கையை தேர்தல் ஆணையம் இம்மாதம் 10 – ஆம் தேதியே தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.