Latestமலேசியா

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் உள்ள 11 அனைத்துலக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜோர்ச் டவுன், நவ 21 – இன்று சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் உள்ள 11 அனைத்துலக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அப்பள்ளிகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டதோடு போலிஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பெட்டாலிங் ஜெயா மற்றும் ஷா ஆலாமில் 2 பள்ளிகளிலும், காஜாங், சுபாங் ஜெயா மற்றும் கோலா லாங்காட்டில் ஒரு பள்ளிகள் என மொத்தம் 7 அனைத்துலக பள்ளிகளில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றநிலை உருவானது.

இந்த தகவலை உறுதிபடுத்திய சிலாங்கூர் போலிஸ் தலைவர் ஹுசேய்ன் ஒமார், தகவல் கிடைக்கப்பெற்றவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வெடிபொருள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பினாங்கு தஞ்ஞோங் தோக்கோங் மற்றும் ஜாலான் சுங்கை பினாங்கில் செயல்பட்டு வரும் 2 அனைத்துலக பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பினாங்கு வடகிழக்கு இடைக்கால போலிஸ் தலைவர் சுப்ரின்டெண்டன் சரவணன் தெரிவித்துள்ளார்.

‘பள்ளியில் வெடிகுண்டு புதைக்கப்பட்டுள்ளது’ எனும் ஒரே உள்ளடக்கத்துடன், இரண்டு பள்ளிகளுக்கும் ஒரே அனுப்புனரிடமிருந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தகவல் கிடைத்தவுடன் K9 பிரிவுடன் மாநில தலைமையகத்தைச் சேர்ந்த போலிஸ் அதிகாரிகள் உடனடியாக அவ்விரு பள்ளிகளுக்கு அனுப்பட்டதாகவும், ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்ட அவர் இது குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

பள்ளிகளுக்கு அனுப்பட்ட மின்னஞ்சலில், அனுப்புனர் சிரமத்தில் இருப்பதாகவும், தன்னை அனைவரும் வெறுப்பதாகவும், சிறுவயதிலிருந்து தந்தையால் கற்பழிக்கப்பட்டு வருவதாகவும், அதே சமயத்தில் பள்ளியில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சரவணன் கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் இருக்கும் கோலாலம்பூர் வங்சா மாஜு பகுதியில் உள்ள 2 அனைத்துலக பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை கோலாலம்பூர் போலிஸ் தலைவர் அல்லாவுடீன் அப்துல் மஜிட்டும் உறுதிபடுத்தியிருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!