
கோலாலம்பூர், செப்டம்பர் 7 – தமக்கு எதிரான பணமோசடி மற்றும் வருமானத்தை உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் அறிவிக்க தவறியது தொடர்பான 17 குற்றச்சாட்டுகளை இரத்துச் செய்யக் கோரி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூர் மனு செய்துள்ளார்.
தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை, குறைப்பாடுள்ளவை என்பதோடு, சட்டப்பூர்வமாக எந்த தவறும் இல்லை என்பதால், அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டுமென, அந்த முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மனைவி கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று ரோஸ்மா அந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதனால், 2020-ஆம் ஆண்டு, அக்டோபர் நான்காம் தேதி, தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 17 குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை விடுவித்து விடுதலை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரோஸ்மாவின் அந்த மனுவுக்கு அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள் செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள், எதிர்வாதத்தை தாக்கல் செய்ய வேண்டுமென, உயர் நீதிமன்ற நீதிபதி கே.முனியாண்டி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து, அந்த வழக்கு விசாரணை டிசம்பர் 13-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.