கோலாலம்பூர், ஏப்ரல்-10, இந்த ஆண்டு உலக மக்கள் அனுபவித்த தீவிர வானிலை மற்றும் அசாதாரண வெப்பநிலையே, 1850-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகம் சந்தித்துள்ள மிக மோசமான தட்பவெப்பநிலையாகும்.
ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில், உலகளாவிய சராசரி வெப்பநிலை 1.58 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.
இது 1850-ஆம் ஆண்டு தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தின் சராசரியை விட அதிகமாகும் என, ஐரோப்பிய ஒன்றியத்தின் C3S அறிக்கைத் தெரிவிக்கிறது.
இந்த நீண்ட கால அசாதாரணச் சூழல், காலநிலை வேகமாக மாறி வருவதை உலகுக்கு உணர்த்துகிறது.
இந்த சுட்டெரிக்கும் வெப்பம், இவ்வாண்டு நிறைய இயற்கைப் பேரிடர்களுக்கு வித்திட்டிருப்பதையும் அவ்வறிக்கைச் சுட்டிக் காட்டியது.
குறிப்பாக, அமேசான் மழைக்காடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வறட்சியால், ஜனவரி முதல் மார்ச் வரை வெனிசுலாவில் அடுத்தடுத்து காட்டுத்தீ ஏற்பட்டது.
அதோடு தென்னாப்பிரிக்காவில் நிலவிய கடும் வறட்சியால் பயிர்கள் அழிந்து லட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் வாடினர்.
போதாக்குறைக்கு,
தென் துருவத்தில் கடல் நீர் சூடேறி பவளப்பாறைகள் வரலாறு காணாத அளவுக்கு பெருமளவில் சேதமடையலாம் என கடல்சார் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அசாதாரண வெப்பத்திற்கு முக்கிய காரணம் மனிதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றமே என C3S தெரிவித்துள்ளது.
எல் நினோ மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் நீர் மேற்பரப்பை வெப்பமாக்கும் வானிலை ஆகியவை, பூமியில் வெப்பநிலை உயர்வுக்கான பிற காரணங்களாகும்.
எல் நினோ தாக்கம் மார்ச் மாதத்தோடு தணிந்த போதும்,
உலக சராசரி கடல் மேற்பரப்பின் வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொட்டது.
கடல் காற்றின் வெப்பநிலையும் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவே இருந்துள்ளது.