
ஹங்ஷாவ், செப் 23 – 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று சீனாவின் ஹங்ஷாவ் நகரில் கோலாகலமாக தொடங்கவிருக்கிறது. கோவிட் தொற்று சீனாவில் முழுமையாக முடிவுக்கு வந்து ஒரு ஆண்டுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு பாரிஸ் விளையாட்டுப் போட்டியில் நடைபெறும் 32 விளையாட்டுகளில் 31 அங்கங்கள் உட்பட 40 விளையாட்டுகள் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெறவிருக்கிறது.
9 ஒலிம்பிக் விளையாட்டரங்ககளில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. போட்டியை ஏற்று நடத்தும் சீனாவுடன், இந்தியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா உட்பட பல ஆசிய நாடுகளும் மத்திய கிழக்கு வட்டார நாடுகள் என மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த 12,000 விளையாட்டாளர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டி 1951-ஆம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்றது. சீனா மூன்றாவது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியை இப்போது நடத்துகிறது.