ஹாங் காங், ஆகஸ்ட்-17, ஹாங் காங் மக்களின் பேரன்பிற்குரிய யிங் யிங் (Ying Ying) இராட்சத பாண்டா கரடி முதன் முறையாகத் தாயாகி வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.
அதுவும் ஓர் ஆண் ஒரு பெண் என இரட்டைக் குட்டிகளை அது ஈன்றெடுத்திருப்பதால் மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது.
இரட்டைக் குட்டிகளின் முதல் புகைப்படம் facebook-கில் வெளியாகி ஆயிரக்கணக்கில் வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.
இதன் மூலம் அதிக வயதில் முதன் முறையாகத் தாயான இராட்சத பாண்டா கரடி என்ற பெருமையையும் யிங் யிங் பெற்றுள்ளது.
தனது 19-வது பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமையன்று யிங் யிங் குட்டிப் போட்டது.
இதே மனிதனாக இருந்திருந்தால் அதன் வயது 57-ழாக இருந்திருக்கும்.
இராட்சத பாண்டா கரடிகள் வழக்கமாகவே இனச்சேர்க்கைக்கு தயக்கம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங்கிற்கு சீனா பரிசாகக் கொடுத்த யிங் யிங்கும் அதன் ஜோடியுமான லே லேவும் (Le Le) 2007-ஆம் ஆண்டு முதல் Ocean Park பூங்காவில் வைக்கப்பட்ட போதும், கடந்த மார்ச்சில் தான் அவை ஒன்றிணைந்தன.