
கோலாலம்பூர், மார்ச் 3 – 1MDB கணக்காய்வு அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப்பும், 1MDB – யின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா கந்தசாமியும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
குற்றம் சாட்டிய வழக்கறிஞர் தரப்பு , அவ்விருவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதை அடுத்து, அவர்களை விடுவிக்க முடிவு செய்திருப்பதாக, நீதிபதி Zaini Mazlan தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
தம் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக , 1MDB இறுதி கணக்காய்வு அறிக்கையை , PAC- தேசிய கணக்காய்வு செயற்குழுவிடம் முன் வைப்பதற்கு முன்பாக, தமது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த அறிக்கையில் மாற்றம் செய்ததாக , 2018 டிசம்பர் 12 -ஆம் தேதி , 70 வயதான நஜீப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனிடையே, 45 வயதான அருள் கந்தா, தம்மீது கட்டொழுங்கு அல்லது குற்றவியல் ரீதியாக நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக , 1MDB கணக்காய்வு அறிக்கையில் மாற்றம் செய்ய , நஜிப்புடன் உடந்தையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.