
கோலாலம்பூர், மார்ச்-3 – 1MDB நிதியிலிருந்து பில்லியன் கணக்கான பணம் வெளிநாடுகளுக்கு மாற்றப்படுவதைத் தடுக்கத் தவறியதற்காக, பேங்க் நெகாரா முன்னாள் ஆளுநர் டான் ஸ்ரீ Dr சே’த்தி அக்தார் அசிஸ் மீது குற்றம் சாட்ட, தேசிய சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.
சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலீனா ஓத்மான் சையிட், மக்களவையில் வழங்கிய எழுத்துப் பூர்வ பதிலில் அதனைத் தெரிவித்தார்.
இருப்பினும், குற்றவியல் நடவடிக்கைகள், சட்டத்தின் கீழ் எந்த நேர வரம்புக்கும் உட்பட்டவை அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென அவர் சொன்னார்.
1MDB நிதி மோசடியைத் தடுக்கத் தவறிய சே’த்தி மீது ஏன் நடவடிக்கை இல்லை? அவரின் சொத்துகள் மற்றும் குடும்பத்தாரின் சொத்துகள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட்டதா? என, கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த அசாலீனா, 1MDB மோசடி குறித்து வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை, எந்தவொரு தனிநபரையும் குறி வைக்காமல் விரிவான விசாரணை மேற்கொண்டதாகச் சொன்னார்.
அதே சமயம், பணச்சலவை தடுப்பு விசாரணைப் பிரிவும் சே’த்தியோ அவரது குடும்பத்தார் மீதோ விசாரணை அறிக்கை எதனையும் திறக்கவில்லை என அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் 1MDB விசாரணையில் அரசு தரப்பின் முக்கிய சாட்சியாக சே’த்தி சாட்சியமளித்தார்.
தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்பதோடு தீய நோக்கம் கொண்டவை என அவர் கூறியிருந்தார்.