
கோலாலம்பூர், மார்ச் 25 – 1MDB முதலீட்டு நிறுவனத்திடம் இருந்து பல கோடி டாலர் கொள்ளையிட உதவியாக இருந்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட Goldman Sachs வங்கியின் முன்னாள் அதிகாரி ரோஜர் ங் ( Roger Ng ) , 3 கோடியே 51 லட்சம் அமெரிக்க டாலர் தொகையை திருப்பி ஒப்படைக்கும்படி , அமெரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, அந்த குற்றச் செயலுடன் தொடர்புடைய பல லட்சம் டாலர் தொகையை மலேசிய அரசாங்கத்திடம் வழங்கிவிட்ட தாம் இனியும் கடன்பட்டிருக்கவில்லை என Ng கூறியிருந்தார்.
எனினும், அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள புரூக்ளின் (Brooklyn) மாவட்ட நீதிபதி மார்கோ பிரோடி ( Margo Brodie ) மறுத்தார்.
NG – கிடமிருந்து 3 கோடியே 51 லட்சம் டாலரை பறிமுதல் செய்யும் நடவடிக்கை, அரசியலமைப்பின் படி அதிகபட்ச ஒரு நடவடிக்கை அல்ல என அவர் குறிப்பிட்டார்.
மேலும், 1MDB மோசடியில் மற்றவர்களைக் காட்டிலும் NG –கின் குற்றம் குறைவானது என்றாலும், மிகப் பெரிய நிதியை உட்படுத்திய குற்றச் செயலில் அவரது பங்கும் இருந்திருப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.