கோலாலம்பூர், ஜன 6 – 1MDB நிதி முறைகேடு தொடர்பான விசாரணையில் ஆதாரங்களை கையாள்வதில் அதிகாரிகள் நியாயமற்று முறையில் நடந்து கொள்வதால் தாம் இரட்டை பாதிப்பை எதிர்நோக்குவதாக நஜீப் ரசாக் வேதனையுடன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் 1MDBயின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தசாமியுடன் விடுதலை செய்யப்பட்டதை மேற்கோள் காட்டி, முந்தைய வழக்கில் ஏற்கனவே தீர்க்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக முன்னாள் பிரதமருமான நஜீப் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கில் 2014 தணிக்கை அறிக்கையை சீர்குலைத்ததாகவும், 2009 ஆம் ஆண்டு வாரியத்தில் இருந்து நிதியாளர் லோ டேக் ஜோவின் (Low Taek Jho) பெயரை நீக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால், அரசுத் தரப்பு வழக்கின் முடிவில் நான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டேன். ஆனாலும், 2024 இல், அதே குற்றச்சாட்டுகள் மீண்டும் எழுந்ததால் அந்த விசாரணையில் தனக்கு எதிரான பாதகமான அனுமானங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகுவதற்கு காரணமாக அமைந்ததாக நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுராவிடம் ( Datuk Collin Lawrence Sequerah ) நஜிப் தெரிவித்தார்.
அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பில்லியன் கணக்கான நிதிகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான விசாரணையில் சாட்சியம் அளிக்கும்போது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இதனால் தனக்கு எதிரான விசாரணையில் நியாயமற்ற இரட்டை போக்கு காணப்படுவது குறித்து கவலை அடைவதாக முன்னாள் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜீப் நீதிபதியிடம் முறையிட்டார்.