ஃபுளோரிடா, டிசம்பர்-29 – அமெரிக்கா, ஃபுளோரிடாவில், வெறும் 2 டாலர் டிப்ஸ் கொடுத்ததால் அதிருப்தியுற்ற பீட்சா அனுப்பும் ஊழியர், ஒரு கர்ப்பிணி பெண்ணை 14 முறை கத்தியால் குத்தியுள்ளார்.
22 வயது Brianna Alvelo எனும் அப்பெண் ஊழியர், சில தினங்களுக்கு முன்னர் ஹோட்டல் அறையில் பிறந்தநாள் கொண்டாடிய குடும்பத்துக்கு பீட்சாவை அனுப்பச் சென்றார்.
33 டாலர் விலையிலான பீட்சாவை ஒப்படைத்ததும், 50 டாலருக்கு அவரிடத்தில் சில்லறை இல்லை.
இதையடுத்து வீட்டில் பணத்தைத் தேடிய வாடிக்கையாளர், Alvelo-வுக்கு 2 டாலரை மட்டும் டிப்ஸாக தந்து அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், சுமார் 90 நிமிடங்கள் கழித்து முகமூடி அணிந்திருந்த ஓர் ஆடவருடன் அந்த ஹோட்டல் அறைக்கே Alvelo திரும்பியுள்ளார்.
அது CCTV இரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.
அறைக்குள் புகுந்து, கர்ப்பிணிப் பெண்ணை அவர் கத்தியால் தாக்கினார்.
மகளைப் பாதுகாக்க முற்பட்டதால் அப்பெண்ணின் முதுகில் கத்திக் குத்து பட்டது.
உதவிக்கு கைப்பேசியை எடுத்து பேச போன போது, அதனையும் Alvelo பிடுங்கி போட்டுடைத்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கர்ப்பிணியை, 14 தடவை கத்தியால் குத்தி விட்டு, துப்பாக்கி வைத்திருந்த ஆடவனுடன் அவர் தப்பியோடினார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் பலனாக, மறுநாளே Alvelo கைதான வேளை, உடனிருந்த ஆடவன் இன்னும் பிடிபடவில்லை.
கொலை முயற்சி, சுடும் ஆயுதத்துடன் வீட்டில் அத்துமீறியது, தாக்கியது, கடத்தியது ஆகியக் குற்றச்சாட்டுகளை Alvelo எதிர்நோக்கியுள்ளார்.
அவர் வேலை செய்யும் நிறுவனமான Marco’s Pizza, அச்சம்பவம் குறித்து கடும் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளது.
போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியது.