கோலாலம்பூர், ஆகஸ்ட்-7, அரச மலேசியப் போலீஸ் படையின் (PDRM) 2 மூத்த உயரதிகாரிகளை உட்படுத்திய உத்தேச பணியிடமாற்றம் எனக் கூறி வெளியான ஊடகச் செய்தியை, போலீஸ் விசாரித்து வருகிறது.
அது குறித்து பெறப்பட்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி இசா (Rusdi Isa) தெரிவித்தார்.
எனினும் சம்பந்தப்பட்ட அந்த இணையச் செய்தி ஊடகத்தின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
குற்றவியல் சட்டத்தின் 505-வது பிரிவின் கீழும், 1998 தொடர்பு – பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழும் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
பொது மக்கள் மத்தியில் கலக்கத்தையோ அல்லது பயத்தையோ ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்படும் கூற்றுகளுக்கு அந்த 505-வது பிரிவு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் அச்செய்தி குறித்து பொதுமக்கள் யூகமெதனையும் எழுப்ப வேண்டாமெனக் கேட்டுக் கொண்ட டத்தோ ருஸ்டி, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக ஊடகங்களில் பகிருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.
தேசியப் போலீஸ் படையின் துணைத் தலைவர் (DIGP) டத்தோ ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை (Datuk Seri Ayob Khan Mydin Pitchay), மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஷூஹாய்லி மொஹமட் சேய்ன் (Datuk Seri Mohd Shuhaily Mohd Zain) இருவரும், வேறு துறைகளுக்குத் தலைமையேற்க ஏதுவாக PDRM-மிலிருந்து வெளியேறவுள்ளதாக மலேசியா கினி வெளியிட்டிருந்த செய்தியை, IGP தான் ஸ்ரீ ரசாருடின் ஹூசாய்ன் (Razarudin Husain) மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.