உலு சிலாங்கூர், ஜனவரி-7, உலு சிலாங்கூர், தாமான் கெம்போஜா சாலை சந்திப்பில் நேற்றிரவு இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில், தந்தை உயிரிழந்த வேளை, 7 வயது மகன் காயங்களுடன் உயிர் தப்பினான்.
இரவு 8.50 மணி வாக்கில் ஜாலான் பெர்சியாரான் தாசேக் தெராத்தாயில் நிகழ்ந்த அவ்விபத்தில், 29 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
சம்பவத்தின் போது, தந்தையும் மகனும் Yamaha 135LC ரக மோட்டார் சைக்கிளில் புக்கிட் பெரூந்தோங்கிலிருந்து புக்கிட் செந்தோசாவுக்குச் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது தாமான் கெம்போஜா சாலை சந்திப்பைக் கடக்க முயன்ற Modenas மோட்டார் சைக்கிளுடன், அவர்களின் மோட்டார் சைக்கிள் மோதியது.
அதில் மரணமடைந்த தந்தையின் உடல் சவப்பரிசோதனைக்காக குவாலா குபு பாரு மருத்துவமனைக்கு அனுப்பட்ட வேளை, சிராய்ப்புக் காயமடைந்த மகனும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
குறுக்கே வந்த Modenas மோட்டார் சைக்கிளில் 14 வயதே நிரம்பிய இரு பையன்கள் இருந்துள்ளனர்.
அவ்விருவருவரில் ஒருவனுக்கு முகத்தில் காயமேற்பட்டு கால் எலும்பு முறிந்து செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்;
வலது கால் பாதத்தில் காயமடைந்த மற்றொரு பையன் குவாலா குபு பாரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.