கோலாலம்பூர், நவம்பர்-12 – தேசிய உயர் கல்வி நிதிக் கழகமான PTPTN-னிடமிருந்து கல்விக் கடன் பெற்ற 2.7 மில்லியன் பேர், இன்னும் திருப்பிச் செலுத்தாத மொத்தத் தொகை 32.29 பில்லியன் ரிங்கிட்டாகும்.
அது, கடந்தாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரைக்குமான புள்ளிவிவரம் என உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிர் ( Datuk Seri Dr Zambry Abdul Kadir) தெரிவித்தார்.
பார்க்கப் போனால் அந்த 2.7 மில்லியன் பேரும் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கியிருக்க வேண்டுமென அமைச்சர் சொன்னார்.
கடந்தாண்டு இறுதி வரை 4 மில்லியன் பேருக்கு மொத்தமாக 71.3 பில்லியன் ரிங்கிட் கடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
PTPTN கடனாளிகளில் 71.9 விழுக்காட்டினர் பூமிபுத்ராக்கள், 28.1 விழுக்காட்டிர் பூமிபுத்ராக்கள் அல்லாதோர் எனக் கூறிய Dr Zambry, கோட்டா முறையில் கடனுதவி வழங்கப்படுவதில்லை என்றார்.
மாறாக, அரசாங்க, தனியார் உயர் கல்விக் கூடங்கள் மற்றும் தொழில் பயிற்சிக் கல்லூரிகளில் படிக்கும் மலேசிய குடிமக்கள் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் அது அங்கீகரிக்கப்படுவதாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் கூறினார்.